சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட அதிகாரி, அவமானத்தால் தற்கொலை.!

நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி செயலாளர், அவமானத்தால் வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் கூட்டுறவு நிலவள வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில், சுற்றுவட்டார பகுதியை சார்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேமிப்பு கணக்குகளை வைத்துள்ளனர். சமீபத்தில், தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கியில் உள்ள நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பின் பேரில், பல மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் மோசடி மற்றும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். கீரனூர் வங்கியிலும் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், உறவினரின் பெயரில் வங்கி அதிகாரி ரூ.1.80 கோடி அளவில் நகை இல்லாமல் நகைக்கடன் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது.
கணக்குகளின் படி 934 நகை பொட்டலங்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில், 832 பொட்டலம் மட்டுமே இருந்துள்ளது. வங்கியில் இருந்த 832 நகை பொட்டலத்திற்கு மொத்தமாக ரூ.2 கோடியே 54 இலட்சத்து 14 ஆயிரம் கடன் வழங்கப்பட்ட நிலையில், இல்லாத நகை பொட்டலம் பெயரில் ரூ.1 கோடியே 8 இலட்சத்து 17 ஆயிரத்து 200 கடன் வழங்கப்பட்டுள்ளது என கூறி மோசடி செய்தது அம்பலமானது.
அதனைத்தொடர்ந்து, வங்கியின் செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் கனகவேல் வங்கிப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பான விசாரணை கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கீரனூர் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வங்கியின் செயலாளராக இருந்து நீலகண்டன் கீரனூரில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் அவமானம் தாங்க இயலாமல் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.