#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாலிடெக்னிக் மாணவரை கொன்று புதைத்த சிறுவர்கள்... ஒரே பெண்ணை காதலித்ததால் நடந்த பகீர் சம்பவம்...!
நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமத்தூரில் வசித்து வரும் தங்கதுரை மகன் ராஜேந்திரன் (22). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல் வருடம் படித்து வந்தார்.
இந்நிலையில் ராஜேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி குலசேகரன் பட்டினம் கோயிலுக்கு செல்வதாக சொல்லிச் சென்றவர், பிறகு வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக ராஜேந்திரனின் தாய் சுமதி திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திசையன்விளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் உவரி காவல்துறையினர் நேற்று ஒரு வழக்கு தொடர்பாக திசையன்விளை சேர்ந்த ஒரு இளைஞரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், காணாமல் போன ராஜேந்திரனை தட்டார் மடம் அருகே எம் எல்தேரி பகுதியில் கொலை செய்து புதைத்ததாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், இந்த சம்பவத்தில் திசையன்விளையை சேர்ந்த மூன்று சிறுவர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து திசையன்விளை காவல் துறையினர் சிறுவர்கள் மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்களை ராஜேந்திரனை கொலை செய்து புதைத்த எம் எல் தேரி பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது வள்ளியூர் டிஎஸ்பி மகேஷ் குமார், திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், தட்டார் மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ், சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் ராஜேந்திரனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே அரசு மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு சோதனை நடந்தது.
கொலை செய்த மூன்று சிறுவர்களிடமும் நடத்திய விசாரணையில், ராஜேந்திரனும், 16 வயது சிறுவன் ஒருவனும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி ராஜேந்திரனை அந்த சிறுவர்கள் தட்டார் மடம் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத எம்எல் தேரி பகுதிக்கு அழைத்து வந்து நான்கு பேரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மூன்று சிறுவர்களும் சேர்ந்து ராஜேந்திரனை அடித்து கொலை செய்து புதைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கொலையான ராஜேந்திரனின் தாய் சுமதி கூறுகையில், கோயிலுக்கு செல்வதாக கூறி சென்ற என் மகன் வீடு திரும்பவில்லை என்று திசையன்விளை காவல் நிலையத்தில், கடந்த அக்டோபர் 21-ம் தேதி புகார் அளித்தேன்.
அப்போது மனு பெற்ற காவல் துறையினர் உடனே வழக்கு பதிவு செய்யாமல் அலைக்கழித்தனர். சிறிது நாள் கழித்து காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்தனர். மேலும் என் மகன் காணாமல் போனது குறித்து முறையாக விசாரிக்கவில்லை. உடலை தோண்டி எடுக்கும் போதும் எங்களை காவல் துறையினர் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.