தனியார் காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு... பாலியல் தொல்லை அளித்த காப்பக நிறுவனர்... கைது செய்த போலீசார்..!!



The founder of the shelter, who sexually harassed the girls in the private shelter, was arrested by the police..

தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த காப்பக உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் புதிய கடற்கரை சாலையில் "நம்பிக்கை" என்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. காரைக்கால் ஓ.என்.ஜி.சி உற்பத்தி பிரிவில் வேலை செய்து வரும்  பரமேஸ்வரனும் அவரது மனைவி சூடாமணியும் இந்த காப்பகத்தை நடத்தி வருகின்றனர். இந்த  காப்பகத்தில் பொருளாதரத்தில் நலிவுற்ற, தாய் தந்தை இழந்த, பொருளாதாரத்தில் நலிவுற்ற, 18 வயதுக்கு உட்பட்ட 15 ஆண் குழந்தைகள் மற்றும் 15 பெண் குழந்தைகள் தங்கியுள்ளனர். 

இந்த நிலையில் காப்பகத்தில் தங்கி 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி குழந்தைகள் காப்பகத்தின் நிறுவனர் பரமேஸ்வரன் தன்னிடமும், காப்பகத்தில் உள்ள சிறுமிகளிடமும் தொடர்ந்து பாலியல் தொல்லை‌ அளித்து  வருவதாகவும், தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் அத்து மீறலில் ஈடுப்பட்டதாகவும் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பரமேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த காப்பக நிறுவனர் பரமேஸ்வரன்  குழந்தைகள் காப்பக வளாகத்தில் இருந்த அவரது வீட்டில் இருந்து குடும்பத்துடன் தலைமறைவானார்.

இதைத் தொடர்ந்து துணை ஆட்சியர்  தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் "நம்பிக்கை" குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள சிறுமிகளிடம்  விசாரணை நடத்தினர். விசாரணையில் பரமேஸ்வரன் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதிபடுத்தப்பட்டது. மேலும் காப்பகத்திற்கு பணம் பெறுவதற்காக சிறுமிகளை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதை தொடர்ந்து "நம்பிக்கை" காப்பகத்தில் இருந்த குழந்தைகள் அரசு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் "நம்பிக்கை" காப்பகத்தை இழுத்து மூடினர். இதைத் தொடர்ந்து தலைமறைவான  பரமேஸ்வனை தனிப்படை அமைத்து தேடும் பணி நடந்து வந்தது. 

நாகை அருகே உறவினர் வீட்டில் இருந்த பரமேஸ்வரனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். காப்பகத்தில் இருந்த குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை அளித்து, மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.