கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஆண்டனி ஸ்கெட்ச் அப்துலுக்குன்னு நினைச்சியா?.. 2 பேர் கடத்தலில் பெண் உட்பட 10 பேர் கைது., பரபரப்பு தகவல்.!
குறைந்த விலையில் வைரக்கற்கள் வாங்கித்தருவதாக கூறி ரூ.25 இலட்சம் மோசடி செய்ய முயற்சித்த கும்பலை கடத்திய பெண் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தை சேர்ந்தவர் அப்துல் ஜாபர் (வயது 29). இவரின் தந்தையான அக்கீம், பழ வியாபாரியாக பணியாற்றி வந்துள்ளார். தந்தையின் தொழிலை அப்துலும் கவனித்து வந்த நிலையில், கொரோனாவால் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நகையை அடகு வைத்து குடும்பத்தை நகர்த்தி வந்த நிலையில், அதனை அடைக்க இயலாத அளவு வறுமை வாட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அப்துல் மற்றும் அவரின் நண்பர் தவுபிக் ராஜா சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியில் தங்கியிருந்து பழ விபரம் செய்ய போவதாக தந்தையிடம் தெரிவித்து சென்றுள்ளனர்.
கடந்த 20 ஆம் தேதி இருவரின் செல்போன் எண்களும் திடீரென சுவிட்ச் ஆப் ஆகிய நிலையில், 21 ஆம் தேதி தவுபீக்கின் மனைவியான பரிஹானாவுக்கு மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மறுமுனையில் பேசியவர்கள், அப்துல் மற்றும் தவுபீக் ஆகியோர் பழ வியாபாரம் செய்வதை கூறி ரூ.5 இலட்சம் எங்களிடம் மோசடி செய்துள்ளார்கள், பணத்தை கொடுத்தால் இருவரையும் விடுவிப்போம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பதறிப்போன பரிஹானா அப்துலின் தந்தைக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த அக்கீம் மகனை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை என்பதால், நேற்று முன்தினம் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளவே, கடத்தல் கும்பல் திருப்போரூர் பகுதியில் பதுங்கி இருப்பது உறுதியானது. தனிப்படை அதிகாரிகள் விரைந்து சென்று அப்துல் ஜாபர், தவ்பீக் ராஜா மற்றும் ஜலீல் ஆகிய 3 பேரை மீட்டனர். மேலும், அவர்களை கடத்திய பெண் உட்பட 10 பேர் கும்பலை கைது செய்தனர்.
இவர்களிடம் நடந்த விசாரணையில், அப்துல் ஜாபர் மற்றும் தவ்பீக் ராஜா ஆகியோர் கொரோனாவின் போது ஏற்பட்ட நஷ்டத்திற்கு நகைகளை அடகு வைத்து இலட்சக்கணக்கில் கடனாளி ஆகியுள்ளார். இவர்களுக்கு ஜலீல் ரஹ்மான் என்பவருடன் பழக்கம் ஏற்படவே, அவர் நெல்லூரில் டெக்டைல்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். கடனால் தவித்தவர்களுக்கு உதவுதாக கூறி, போலியான முத்து மற்றும் வைர கற்களை வாங்கி, நிஜக்கற்கள் போல விற்பனை செய்யலாம் என ஜலீல் யோசனை தெரிவித்துள்ளார். இந்த விஷயத்திற்கு அப்துல் மற்றும் தவ்பீக் ஒப்புக்கொண்டுள்ளனர்.
தவ்பீக் தனக்கு தெரிந்த ஆண்டனி பெனெடிக் ராஜ் என்பரிடம், சுங்கத்துறை அதிகாரிகளை தனக்கு தெரியும். அவர்கள் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் முத்து, வைர கற்களை குறைந்த விலைக்கு என்னிடம் தருவதாக கூறியுள்ளார்கள். ரூ.25 இலட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் முத்து கற்கள் விற்பனைக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். தவ்பீக்கை நம்பிய ஆண்டனி பெனெடிக் ராஜும், தனது நண்பர்களான சுமன், ராஜேஷ், அல்போன்ஸ் உட்பட 9 பேரிடம் கடன் வாங்கி வைர கற்களை வாங்க ஆசைப்பட்டுள்ளார்.
பணத்தை தயார் செய்த பெனெடிக் ராஜ், மீனம்பாக்கத்தில் வைர கற்களை கொடுக்க தவ்பீக் மற்றும் அப்துலுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர் நெல்லூர் சென்று கற்களை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஆண்டனி தனக்கு கற்களே வேண்டாம் என்று கூறவே, இருவரும் மோசடி கும்பல் என்பதை உணர்ந்துள்ளார். அப்துல் - தவ்பீக் ஆகியோரை பிடிக்க திட்டம் தீட்டிய ஆண்டனி, அவர்களை நூதனமாக புராதன பொருட்கள் ஏதேனும் இருந்தால் வாங்கிக்கொள்கிறேன் என்று ஏமாற்றி மீனம்பாக்கம் வரவழைத்துள்ளார்.
அப்துல் - தவ்பீக் வெறும் கையுடன் தான் வருவார்கள் என்பதை முன்னதாகவே கணித்திருந்த ஆண்டனி, தனது நண்பர்களுடன் இருவரையும் கடத்தி காரில் திருப்போரூருக்கு அழைத்து சென்று, நீங்கள் எங்களுக்கு ரூ.5 இலட்சம் பணம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர். சிக்கிய இருவரும் ஜலீலை கைகாட்ட, அவரை கடத்தி சென்று விசாரணை செய்தபோது அவரும் புரளி மன்னன் என்பது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, தவ்பீக்கின் மனைவிக்கு தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர். ஆனால், அவரோ அப்துலின் தந்தைக்கு தகவலை தெரியப்படுத்தி, காவல் துறையினரால் அனைவரும் சிக்கியுள்ளனர்.
கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆண்டனி பெனெடிக் ராஜ், சுமன், அல்போன்ஸ், வேல்முருகன், புவனேஸ்வரன், வெங்கட்ராமன், ராஜேஷ், சரத் பாபு, அஸ்வினி ஆகிய 10 பேர் கும்பல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.