வறுமையில் வாடினாலும் படிப்பே பலன் தரும்.. படிப்புக்காக குடும்பத்தை பிரிந்த அபிநயா பி.ஏ.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை, பாபநாசத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் மேல் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உட்பட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த அடர்த்தியான காட்டிற்குள் காணி பழங்குடியினத்தை சேர்ந்த 7 குடும்பம் வசித்து வருகிறது. 7 குடும்பத்தையும் சேர்த்து 24 பேர் இக்கிராமத்தின் மக்கள் தொகை ஆகும்.
இக்கிராமத்தில் இருப்பவர்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகும். இந்த கிராமத்தை சேர்ந்த பெண் அபிநயா, வனகிராமத்தை சேர்ந்த முதல் படித்த பெண் என்ற பெருமையை பெறவுள்ளார். அவரை எப்படியாவது படித்து நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என அபிநயாவின் தந்தை அய்யப்பன் ஆசைப்பட்டு அதற்காக உழைத்து வருகிறார்.
படிப்புக்காக குடும்பத்தை பிரிந்த அபிநயா திருநெல்வேலியில் தங்கியிருந்தவாறு 12 ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். அதனைத்தொடர்ந்து, அவர் நெல்லையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு படிக்கவுள்ளார். இவரின் கிராமத்தில் செல்போன் சிக்னல் கூட கிடைக்காது என்பதால், குடும்பமாக இவர்கள் காரையாறு அணை அருகே வசித்து வருகிறார்கள்.