ஒரேயொரு எச்சரிக்கை பலகை இல்லாததால், ஆற்று புதைமணலில் சிக்கி 6 பேர் பலி.. தாராபுரத்தில் சோகம்.!



Tiruppur Dharapuram River Bridge 6 Died Struggle Quicksand pit

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இடுவாய் கிராமம், அண்ணாமலை கார்டனை சேர்ந்தவர் அமிர்த கிருஷ்ணன் (வயது 18), ஸ்ரீதர் (வயது 17), யுவன் (வயது 19), மோகன் (வயது 18), சக்கரவர்மன் (வயது 18), ரஞ்சித் (வயது 20). இவர்கள் அனைவரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். 6 மாணவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் உறவினருடன், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாம்பாறை முனீஸ்வரன் கோவிலுக்கு வேனில் சென்றுள்ளனர்.

அப்போது, தாராபுரம் அமராவதி ஆறு புதுப்பாலம் அருகே வருகையில், வேனை அங்கு நிறுத்திவிட்டு அமிர்த கிருஷ்ணன், ஸ்ரீதர், யுவன், மோகன், ரஞ்சித், சக்கரவர்மன் ஆகியோர் நீரில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்று சிக்கியுள்ளனர். அவர்கள் காப்பாற்றக்கூறி கூச்சலிடவே, அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்க முயற்சித்தும் பலனில்லாது, 6 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தாராபுரம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களை காப்பாற்ற முயன்று உயிருக்கு போராடிய ஜீவா, சரண் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.

Tiruppur

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இடுவாய் கிராம மக்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் குவிந்து கதறி அழுதனர். குறிப்பிட்ட பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், "தாராபுரம் அமராவதி ஆறு புதுப்பாலம் கரையில், இரண்டு புறத்திலும் புதைமணல் உள்ளது. உள்ளூர் மக்களுக்கு விஷயம் தெரியும் என்பதால், அவர்கள் அங்கு செல்வது  இல்லை. வெளியூரில் இருந்து வருபவருக்கு புதைமணல் தெரியாது. இதனால் ஆற்றில் இறங்கி அதில் சிக்கிக்கொள்கின்றனர். இதுவரை மட்டுமே இந்த இடத்தில் 30 பேர் இறந்திருப்பார்கள். எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் பலனில்லை" என்று தெரிவித்தனர்.