மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
வயிற்றுப்பிழைப்புக்காக தமிழகம் வந்த வடமாநில இளைஞர் 4 பேர் கும்பலால் அடித்தே கொலை.. நெஞ்சை உலுக்கும் பயங்கரம்.!
வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தாரால் படுகொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வயிற்று பிழைப்புக்காக தமிழகம் வந்த சகோதரர்களில் ஒருவர் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், வேலாம்பாளையம் காட்டுப்பகுதியில் உடலில் காயத்துடன் வாலிபரின் உடல் இருப்பதாகவும், அவரின் உடலருகே மற்றொருவர் படுகாயத்துடன் அழுதுகொண்டு இருப்பதாகவும் மங்கலம் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கொலையானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அருகில் அழுதுகொண்டு இருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துவிட்டு, அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது. சகோதரர்களான ராஜ்குமார், பிராஜ் லால் வேலைதேடி திருப்பூருக்கு வருகை தந்துள்ளனர். அப்போது, திருப்பூர் பல்லடம் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த பர்பெக்ட் லேபர் சொல்யூஷன் நிறுவனத்தை அணுகி இருக்கின்றனர்.
இதனையடுத்து, அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் சகோதரர்களுக்கு வேலை வாங்கி தருவதாக பல இடங்களுக்கு அழைத்து சென்று காண்பித்த நிலையில், தங்களுக்கு இந்த ஊதியம் போதாது என்று கூறியுள்ளனர். இதனால் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த நிலையில், இரவு 11 மணியளவில் வேறொரு இடத்தில் வேலை உள்ளது என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரவு 11 மணியளவில் எங்கு அழைக்கிறீர்கள்? எங்களால் தற்போது வர இயலாது என பிராஜ் லால் தெரிவிக்க, இருதரப்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வேலைவாய்ப்பு நிறுவன பணிஅய்லர்கள் 4 பேர் சேர்ந்து சகோதரர்களை தாக்கியுள்ளனர். பின்னர், தங்களின் காரில் இருவரையும் ஏற்றிக்கொண்டு வேலாம்பாளையம் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரின் சகோதரர் பிராஜ் லால் மட்டும் காயத்துடன் இருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தனியார் வேலைவாய்ப்பு நிறுவன பணியாளர்களாக புதுக்கோட்டையை சார்ந்த நிர்மல் (வயது 35), கேரளாவை சார்ந்த ராஜேஷ் (வயது 25), கிருஷ்ணகிரியை சார்ந்த முகமது சுபேர் (வயது 35). உளுந்தூர்பேட்டை விஜய் பாலாஜி (வயது 34) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.