விடுமுறை கொண்டாட்டத்தில் சோகம்.. ஆற்றில் குளிக்க சென்ற மகள், தந்தை உட்பட 3 பேர் பரிதாப பலி.!



Chengalpattu Palar River Father Daughter Including 3 Died When Bating River

ஆற்றில் மாயமான தந்தை, மகள் உட்பட 3 பேர் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள திரிசூலம் பகுதியை சார்ந்தவர் லியோனிசிங் ராஜா (வயது 38). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் பெர்சி (வயது 16). இவர் பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். லியோனிசிங் ராஜாவின் அண்ணன் சேகர். இவரது மகன் லெனின்ஸ்டன் (வயது 20). 

இவர்கள் 3 பேர் உட்பட குடும்பத்தினர் 10 க்கும் மேற்பட்டோர், கிருஸ்துமஸ் தின பண்டிகை விடுமுறையை கொண்டாட செங்கல்பட்டை அடுத்துள்ள இருங்குன்றம்பள்ளி பாலாற்றுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் பாலாற்றுக்கு சென்ற நிலையில், கடந்த மாத கனமழையால் பாலாற்றில் தற்போது வரை வெள்ளம் செல்கிறது. 

Chengalpattu

இந்நிலையில், ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த லியோனிசிங் ராஜா, பெர்சி, லெனின்ஸ்டன் ஆகிய 3 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த செங்கல்பட்டு தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள், ரப்பர் படகு உதவியுடன் 3 பேரையும் தேடி வந்தனர். 

நேற்று மதியத்திற்கு மேல் லியோனிசிங் ராஜா, பெர்சி உடல் சேற்றில் சிக்கியவாறு மீட்கப்பட்ட நிலையில், நீண்ட தேடுதலுக்கு பின்னர் லெனின்ஸ்டன் உடலும் மீட்கப்பட்டது. இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.