கைக்குழந்தை தாய்ப்பால் குடிக்கையில் மூச்சுத்திணறி பலி.. பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?.!
6 மாத கைக்குழந்தை தாய்ப்பால் குடித்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை பகுதியை சார்ந்த ஆயுதப்படை காவல் அதிகாரி விஜயகுமார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்கள் இருவருக்கும் 6 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில், பிரியதர்ஷினி தனது குழந்தைக்கு பாலூட்டும் போது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர், குழந்தையை சென்னையில் உள்ள எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தையின் நுரையீரலில் தாய்ப்பால் ஒன்றுசேர்ந்து கட்டியிருந்த காரணத்தால், குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, குழந்தைகள் பால்குடிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பது இன்றளவில் சற்றே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் குழந்தைகளை எப்படி கவனிப்பது? எப்படி பாலூட்ட வேண்டும் என பெற்றோருக்கு தெரியாமல் இருப்பது மற்றும் வீட்டில் பெரியோர்கள் இல்லாததே காரணம் ஆகும். அன்றைய காலங்களில் கூட்டுக்குடும்பமாக இருக்கையில், பச்சிளம் குழந்தை இருந்தால் அதனை பெரியோர்கள் கவனிப்பார்கள். குழந்தைக்கு பாலூட்டும் முறைகள் குறித்து அவர்கள் குழந்தையின் தாய்க்கு தெரிவிப்பார்கள். இன்று பல்வேறு காரணங்களால் தனிக்குடித்தனம் சென்றுவிட்ட நிலையில், தாயாகும் நிலையில் உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் குழந்தைகள் வளர்ப்பிற்கான அறிவுரைகள் கிடைப்பதில்லை, தெரிவதும் இல்லை. இதனால் குழந்தைகளை எந்த நிலையில் வைத்து பால்குடிக்க வைக்க வேண்டும் என்பதும் சரியாக தெரியாததால் குழந்தைகள் பால் குடிக்கும் போதே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் வாய்ப்புகள் தெரிகிறது.
பாலூட்டும் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்:
தாய்ப்பால் சுரப்பதற்கு பால், பழச்சாறு, இளநீர், குடிநீர், பச்சை காய்கறிகள், கீரைகள், மீன், இறைச்சி, கொழுப்பு நீக்கிய பசும்பால் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அடிக்கடி உணவில் வெந்தயம், சுரைக்காய், சீரகம், பூண்டு, துளசி, பருப்பு வகைகள் போன்றவற்றை சேர்க்க வேண்டும். ஊறவைத்த நிலக்கடலை, கடலை உருண்டை, எள்ளு உருண்டை, பாதாம், பிஸ்தா, முருங்கை கீரை போன்றவற்றை சாப்பிடலாம். பெண்கள் பால் கொடுக்கும் போது ஒரே மார்பகத்தில் இருந்து பால் கொடுக்க வேண்டாம். இரண்டு மார்பகத்தில் மாறி மாறி பால் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பசி இல்லாமல் பால் கொடுப்பதை தாய்மார்கள் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு பசி உள்ளதா? என்பதை அறிய தாயின் சுண்டுவிரலை நன்றாக சுத்தம் செய்து, குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். குழந்தைக்கு பசி இருந்தால் விரலை நன்றாக பிடித்துக்கொள்ளும்.
தாய்ப்பால் குடித்ததும் குழந்தைகளை கீழே படுக்க வைக்காமல், அவர்களை நமது தோளில் சாய்த்து முதுகில் தட்டிக்கொடுத்து குழந்தைகளுக்கு ஏப்பம் வந்ததும் உறங்க வைக்கலாம் அல்லது கீழே படுக்க வைக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் பிரச்சனை குறையும். குழந்தைகளின் வாயில் ரப்பரினால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது, குழந்தையின் முகம் தாயின் மார்பினை நோக்கி இருக்கும் வகையில் வைத்து, குழந்தையின் வாய் மார்பக காம்புகளை பற்றி இருக்க வேண்டும். இது குழந்தை தாய்ப்பாலை குடிக்க உதவியாக இருக்கும். ஒருவேளை குழந்தை தாய்ப்பாலை குடிக்க இயலாமல் தலையை அலைக்கழித்தால், கைகளால் குழந்தையின் தலையை வைத்து பாலூட்டலாம். குழந்தையின் மூக்கு பகுதியில் அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகள் மார்பக காம்புகளை கடிப்பதால், மார்பகம் வலிக்கிறது, அதனால் சரிவர பால் கொடுக்க இயலவில்லை என்றும் சில தாய்மார்கள் வருத்தப்பட நேரிடும். அவ்வாறு குழந்தைகள் மார்பக காம்புகளை கடிப்பது போன்றவை நிகழ்ந்தால் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்கலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனையை கேட்டு பெறலாம். எக்காரணம் கொண்டும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருக்க கூடாது.