சென்னையை நோக்கி படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்! பலத்த போலீஸ் பாதுகாப்பு



party leaders to chennai

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலை மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலைகளை திறந்து வைக்க பல்வேறு மாநில மற்றும் தேசிய அரசியல் தலைவர்கள் இன்று சென்னை வருகின்றனர்.

ஐந்து முறை தமிழகத்தில் முதலமைச்சராகவும், 50 ஆண்டுகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர் கலைஞர் கருணாநிதி. இவர் உடல் நோய் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி தனது 94 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

chennai

இதனை தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சி தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அவர்களுக்கு புதிய சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இருந்த திராவிட கழகத்தின் தூணான அறிஞர் அண்ணா அவர்களின் உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிலைகளும் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைக்கப்பட உள்ளன. மேலும் அதனை தொடர்ந்து சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை கட்சி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த சிலை திறப்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகின்றனர்.

chennai

தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி கலைஞரின் சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக அண்ணா அறிவாலயத்திலும், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழா முடிந்த பின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் சென்று சோனியா அஞ்சலி செலுத்த உள்ளார். தலைவர்கள் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் மாலை 3.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகின்றனர்.