இராமநாதபுரம்: முதலுதவி கிடைக்காமல் மருத்துவமனை வாசலில் பறிபோன உயிர்.. குடும்பத்தினர் கண்ணீர் கதறல்.! 



  in Ramanathapuram Hospital Man dies Electric Attack Failure Of First Aid 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவர், மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் ஆட்டோவில் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாண்டிதுரையை அழைத்து வந்தனர். அப்போது, அங்கு செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்த நிலையில், மருத்துவர் இங்கு இல்லை என்பதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதற்கிடையில், சில நொடிக்குள் முதலுதவி சிகிச்சை கிடைக்காமல் பாண்டித்துரை உயிரிழந்ததாக குடும்பத்தினர் தரப்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

அண்ணாமலை இரங்கல்

இந்த விஷயத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில், "ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மின்சாரம் தாக்கி, அவசர சிகிச்சைக்காக வந்த பாண்டித்துரை என்பவர், மருத்துவர் இல்லாததால், முதலுதவி கூடக் கிடைக்காமல் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க: மீன்பிடிக்கச் சென்றவருக்கு தேனீக்கள் வடிவில் வந்த எமன்; பரிதாப பலி.!

தமிழ்நாடு அரசுக்கு கேள்வி

தமிழகம் முழுவதுமே, சுகாதாரத் துறையில், உயிரிழப்புகள் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படைக் காரணம் என்னவென்றால், போதிய அளவு மருத்துவர்கள் நியமனம் செய்யாமல் இருப்பது தான். தமிழகம் முழுவதும், 1,467 மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது. அனைத்து அரசுத் துறைகளிலுமே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது ஒரு புறம் இருக்க, பொதுமக்கள் உயிருக்குப் பொறுப்பான சுகாதாரத் துறையில் கூட, போதிய மருத்துவர்களை நியமிக்காமல் இருப்பது, அரசு மருத்துவமனைகளை நாடும் ஏழை, எளிய பொதுமக்கள் உயிரை திமுக அரசு கிள்ளுக்கீரையாகப் பார்க்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.

தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதைக் கவனிப்பதை விட, சுகாதாரத் துறையில் அப்படி என்ன முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர்? உயிர்கள் பலியான பிறகு, நீங்கள் ஆடும் நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா?" என கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: #Breaking: சிறுத்தை தாக்கி இளைஞர் பரிதாப பலி., நீலகிரியில் சோகம்.!